தமிழறிஞர் மர்ஹும் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணிகளும் — என்.செல்வராஜா, லண்டன் —

Spread the love

கடந்த 2008 ஓகஸ்ட் 15இல் எம்மைவிட்டுப் பிரிந்த தமிழ் அறிஞர், நூலகவியலாளர் எஸ். எம். கமால்தீன் அவர்களின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவரான நல்லாசான் கமால்தீன் அவர்கள் பற்றிய மனப்பதிவுகளை இன்று பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.  

சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமாணிப் பட்டமும் பெற்றுக்கொண்டவர்.  

தான் மாணவராயிருந்த காலத்தில் பண்டிதர் மு.நல்லதம்பி, சுவாமி விபுலாநந்தர், கலாநிதி க.கணபதிப்பிள்ளை, கலாநிதி சு.வித்தியானந்தன் போன்ற தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்றமையை தன் வாழ்நாளில் பெருமையுடன் நினைவுகூர்ந்துவந்த தமிழறிஞர் எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் தான் கற்ற தமிழ் அறிவை கல்வித்துறையில் மிக்க விருப்புடன் பிரயோகித்து வந்து, சிறந்த பல மாணாக்கர்களை உருவாக்கியிருந்தார். 1948ம் ஆண்டு முதல் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஆசிரியப் பணியோடு எழுத்துத் துறையிலும் தன்னை இனம்காட்டிவந்தார். 1981 முதல் 1985 வரையிலுமான காலகட்டத்தில் நைஜீரியா நாட்டில் கல்வி அதிகாரியாகவும் இவர் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.  

தமிழின்பால் கொண்ட அதீத பற்றுதலால் அறிஞர்கமால்தீன் அவர்கள் இலங்கையில் தமிழில் நூலகத்துறை செழித்து வளரும் வகையில் கடினமாக உழைத்துவந்துள்ளார். முழுநேர ஆசிரியத் தொழிலிருந்து நீங்கி, 1952ம் ஆண்டு கொழும்பு பொது நூலகத்தில் உதவி நூலகராகச் சேர்ந்து, 1954ம் ஆண்டில் பதில் பிரதம நூலகராகப் பதவியுயர்வு பெற்றார். 1961இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை நூலகவியல் சங்கத்தின் ஆரம்பகால நிர்வாக உறுப்பினராகச் சேர்ந்து நீண்டகாலம் அதன் பல்வேறு பதவிகளில் இயங்கிச் செயற்பட்டதுடன் 1972 முதல் 1981 வரை இலங்கை நூலகச் சங்கத்தின் உதவிப் பணிப்பாளர் பொறுப்பையும் சிறிதுகாலம் ஏற்றுச் செயற்பட்டவர். 

இவர் 1975இல் தமிழ்மொழி மூலமாக நூலகவியல் கல்வியை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள வழிசெய்திருந்தார். தமிழ் நூலகர்கள் உருவாக வேண்டும் என்பதில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு தானே விரிவுரையாளராகவும் இருந்து செயற்பட்டார். ஒவ்வொரு வாரமும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நூலகத்துறை விரிவுரைகளை நடத்தியிருந்தார். இன்றுவரை பல சிறந்த நூலகவியலாளர்களை இவர் தமிழில் உருவாக்கியும் தந்துள்ளார். அவரது உருவாக்கத்தில் மலர்ந்த நூலகவியலாளர்களுள் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.  

இலங்கைத் தேசிய நூலகம் உருவாகுவதற்கு முன்னோடியாக அமைந்திருந்த இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையில் 1972இல் உதவிப்பணிப்பாளராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன் நிர்வாகசபையிலும் தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றியுள்ள தமிழறிஞர் எஸ்.எம்.கமால்தீன் பற்றிய மற்றுமொரு முக்கிய விடயம், ஈழத்துத் தமிழரின் மனங்களில் இருந்து எளிதில் மறைந்துவிடாது.  

யாழ். நூலக அழிப்பின் அளவை மதிப்பிட்டவர் 

1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, அந்த அவலச் செய்தியை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்ல அன்று யாழ்மண்ணில் இருந்து இயங்கிய ஒரே பத்திரிகையான ஈழநாடு பத்திரிகையால் முடியாது போய்விட்டது. யாழ் நூலகத்தை எரித்த அரசபடைகள், ஈழநாடு காரியாலயத்தையும் திட்டமிட்டு எரித்துவிட்டதே அதன் காரணம். இந்நிலையில் யாழ் நூலகம் எரிந்த செய்தியை தனிப்பட்ட நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டு, தென்னிலங்கையிலிருந்து ஓடோடி வந்து யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரைச் சந்தித்து, அவரின் உதவியுடன் யாழ்ப்பாண நூலகத்தின் அழிவை மதிப்பீடுசெய்யத் தாமாக முன்வந்திருந்தார்.  

யாழ்ப்பாண நூலகம் எரிந்தபோது, அதனுடன் சேர்ந்து அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த பட்டியல் பேழைகள், மற்றும் முக்கியமான பதிவு ஆவணமான நூல்விபரப்பதிவேடு (Accession Register) என்பனவும் எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. இந்நிலையில் என்ன இருந்தது, என்ன அழிந்தது என்று எதுவுமே தெரியாத இருண்ட வெளியில் யாழ்ப்பாண நூலகரும் அவரது உதவியாளர்களும் நிலைகுலைந்து நின்றிருந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவளித்து, யாழ்ப்பாண நூலகத்துடன் நேரடிச் சம்பந்தம் கொண்டிருந்த அறிஞர்கள் பலரை அணுகி உரையாடி,நூலகத்தின் அழியுண்ட நூல்களின் மற்றும் சொத்துக்களின் விபரங்களை உத்தேசமாகவேனும் மீளக்கணக்கிட்டு சுதந்திரமான அறிக்கையொன்றினை இலங்கைத் தேசிய நூலகத்துக்கும், இலங்கை அரசுக்கும் உடனடியாக அனுப்பி வைத்திருந்தார். இந்த ஆவணம் பின்னாளில் வீரகேசரி உள்ளிட்ட தேசியப் பத்திரிகையிலும் வெளிவந்திருந்தது. இதன் மூலம், அரசாங்கம் மூடிமறைக்க முயற்சிசெய்திருந்த ஒரு வரலாற்று அழிப்பை எரிந்த சூடு தணிவதற்குள் துணிச்சலுடன் அறிவார்ந்த முறையில் வெளிக்கொண்டுவந்திருந்தார்.  

அறிஞர் கமால்தீனின் ‘காலத்தே உணர்ந்து’ செய்த நடவடிக்கையால் உருவான அறிக்கைதான் இன்று இந்த நூலகத்தின் இருப்புகளின் அழிவு பற்றியதான முதலாவது அறிவுசார் ஆவணமாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். தென்னிலங்கை புத்திஜீவிகளின் கண்ணைத் திறக்கவும் இது உதவியிருந்ததெனலாம்.  

ஜனாப் எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் ஏராளமான கட்டுரைகளை இலக்கியத்துறையிலும், நூலகவியல் துறையிலும் எழுதிப் பத்திரிகைகள் வாயிலாகப் பிரசுரித்திருக்கின்றார். பாடசாலை நூலகர் கைநூல் (1975) என்ற அவரது நூல் தமிழ் பாடசாலைகளில் நூலகங்களை இயக்குபவர்களின் அத்தியாவசிய கைநூலாக இன்றும் இருந்து வருகின்றது. சர்வதேச நூலகச் சங்கத்தின் IFLA வெளியீடான பொதுநூலக நியமங்களை 1993இல் தமிழாக்கம் செய்தும் இவர் வெளியிட்டுள்ளார். 

“தாய்லாந்தின் தலைநகரிலே” என்ற பிரயாணக்கட்டுரை நூல்,  பார்பரின் என்ற பெயரில் இலங்கை முஸ்லிம்களின் மரபுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைத் தொகுதி, அறிஞர் சித்தி லெப்பை, கலாநிதி ரி.பி.ஜாயா, கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகிய பெரியார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், கடல் கட்டி என்ற நாவல் ஆகியன அவரது வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆக்கங்களில் சிலவாகும்.  

1975-77 காலகட்டத்தில் கல்பனா என்ற இருவார சஞ்சிகையின் ஆசிரியராகவும், 1978-79 காலகட்டத்தில் Young Muslim என்ற ஆங்கில மாசிகையின் ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியிருக்கின்றார்.  

1987இல் யாழ்ப்பாணத்தில் நான் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட ‘நூலகவியல்’ காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்ததுடன், அதன் வாயிலாக நாம் தமிழ்ப் பிரதேசங்கள் தோறும் முன்னெடுத்த பொது நூலகவியல் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் போன்றனவற்றிலும் தனது சொந்தச் செலவிலேயே எமது அழைப்பையேற்று வந்து கலந்து கொண்டு எங்களை நம்பிக்கையுடன் எமது முயற்சிகளை மேலும் முன்னெடுக்கச் செய்தவர்.  

இலங்கையின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் அமரர் முகம்மது காசிம் சித்திலெவ்வை அவர்களுக்குத் தனியிடமுள்ளது. அவரது படைப்புக்களுள் அஸ்ராருல் ஆலம் என்ற நூல் பிரசித்தமானது. அந்தக்காலத்தில் இந்த நூல் பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு இலக்காகியிருந்தது. அவர் 1885இல் எழுதிய மற்றொரு நூலான ‘அஸன்பே சரித்திரம்’ இலங்கையில் தோன்றிய முதலாவது நாவல் என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவியவர் ஜனாப் எஸ்.எம். கமால்தீனாவார். அத்துடன் வழக்கிழந்திருந்த அந்த நாவலை முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சினால் மறுபதிப்புச் செய்ய வலிகோலியவரும் இவரேயாவார்.  

அசன்பேயுடைய கதை, கொழும்பு முஸ்லிம் நேசன் அச்சகத்தில் முதற்பதிப்பு 1885இல் அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு திருச்சிராப்பள்ளி இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தால் 1974இல் 129 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.  

எகிப்து தேச இராஜவம்சத்தவனான அசன் என்னும் இளைஞனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும், மர்மமும் திருப்பமும் நிறைந்த ஒரு அற்புதக் கதை தான் அசன்பேயின் கதையாகும். பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் அசன், இந்தியாவில் வளர்ந்து பலரின் கொடுமைகளிலிருந்தும் தப்பி பாசினா என்ற ஆங்கிலப் பெண்ணின் காதலனாவதுடன் தன்நாட்டுக்கு மீண்டு தன் பெற்றோருடன் சேர்கிறான். வீரசாகசமும் நல்லொழுக்க போதனையும் மிக்க இந்நாவல், தராதர ஈழத்துத் தமிழ் வழக்கில் எழுதப்பட்டது.  

ஜனாப் கமால்தீன் அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மீளக்கண்டெடுத்து வழங்கிய இலக்கியங்கள் பல உள்ளன. வழக்கற்றுப்போய்விடும் ஆபத்தை எதிர்நோக்கிய அரிய இலக்கியங்களைத் தேடிப்பிடித்து மீளக்கண்டறியும் போக்கு அவருள் பிரிக்க முடியாதபடி ஊறியுள்ளதென்றே கருதுகின்றேன். அவர் வெளியிட்ட ‘கடல்கட்டி’ என்ற நாவலும் அவ்வாறமைந்ததொன்றே. கவனிப்பாரற்றுக் கிடந்த முத்துக்குளிக்கும் தொழில் பற்றியும் அது சார்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் பற்றியுமான அவரது தேடுதலாக இந்த கடல்கட்டி நாவல் மலர்ந்திருக்கின்றது.   

இஸ்லாமிய இலக்கிய உலகம் அறிந்த மூதறிஞர் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த முஸ்லிம் தமிழ்க்கவிஞராவார். மட்டக்களப்புக்கண்மையில் காத்தான்குடியில் 1913இல் பிறந்த இவர் இயற்றிய காவியமான செய்நம்பு நாச்சியார் காவியம், அக்காலத்தில் விதந்து போற்றப்பட்டது. இந்நூலையும் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின்வாயிலாக இவர் நூலுருவில் கொண்டுவந்திருக்கின்றார். இந்நூலில் செய்நம்பு நாச்சியார் காவியத்தை மீள்பிரசுரம் செய்ததுடன் மட்டும் நின்றுவிடாது அக்காவியத்தின் ஆசிரியரான கவிஞர்திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தேடித்தொகுத்து இணைத்துத் தந்திருக்கின்றார். கவிஞர் திலகம் என்ற பெயரில் ஜனாப் எஸ்.எம். கமால்தீன் அவர்களின் ஆக்கமாக, கண்டி கல்ஹின்னை தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக 2001இல் இந்நூல் பிரசுரமாகியுள்ளது.  

அமரர் எஸ்.எம். கமால்தீன் கல்வித்துறையிலும், பதிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும், நூலகவியல் துறையிலும் என்று பன்முகப்பட்ட துறைகளில் ஆற்றிய பங்களிப்பு ஈழத்தமிழ் உலகில் என்றென்றும் பேசப்படும். அவர் தன் வாழ்நாளில் தன்னலமற்று உருவாக்கிவிட்டுள்ள அவரது நன்மாணாக்கர்கள் அவரது நாமத்தை என்றென்றும் தமது செயல்களின் வாயிலாக நிலைநிறுத்தி வைப்பார்கள்.  

அவரது நல்லாத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். 

Post Disclaimer

Disclaimer: தமிழறிஞர் மர்ஹும் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணிகளும் — என்.செல்வராஜா, லண்டன் — - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *