பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன்
முன்னாள் பீடாதிபதி,
தெ.கி. பல்கலைக்கழகம்
இலங்கை ஆட்சி மன்றம், பாராளுமன்றம், அமைச்சரவை என்பது முஸ்லிம்களுக்கு புதிய விடயமல்ல. இலங்கையின் ஆட்சிமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது. எம்.ஸி. அப்துர்ரஹ்மான் என்பவர் 1889ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்சி மன்றத்தில் (Legislative Council) முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக நியமனம் பெற்றதிலிருந்தே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. 1833ஆம் ஆண்டிலேயே சட்டவாக்க சபை (Legislative Council) உருவாக்கப்பட்ட போதும் கூட, முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் பலத்த போராட்டங்களின் பின்னர் தான் 1889 இல் (36 வருடங்களின் பின்) உறுதி செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுமார் பத்து வருடங்கள் சட்ட சபையின் உறுப்பினராக கடமையாற்றிய எம்.ஸி. அப்துர்ரஹ்மான் 1899இல் மரணித்ததை தொடர்ந்து இரண்டாவது தடவையாக அதன் உறுப்பினராக காத்தான்குடியைச் சேர்ந்த சட்ட வல்லுனர் ஏ.எல்.எம்.ஷெரீப் என்பவர் 1899இல் சட்டவாக்க சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோதும், ஒரு வருடத்திலேயே அப்பதவியை இராஜினாமா செய்து, மீண்டும் காத்தான்குடிக்கு திரும்பியமை அக்கால முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான அதிஉயர்ந்த பதவியைக் கூட துச்சமென மதித்து செயல்பட்டுள்ளமையை எமக்கு நிரூபிக்கின்றது.
தேர்தல் மூலம் சட்டவாக்க சபை அங்கத்தினருள் குறிப்பிட்ட தொகையினரை தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்படும்வரை, ஆளுனரே அவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்தார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் ஏக பிரதிநிதியாக, முழு அதிகாரம் உடையவராக அப்போது ஆளுனர் விளங்கினார். உயர் மட்டத்தை சேர்ந்த தமக்கு விரும்பியவர்களை சட்டவாக்க சபையின் உறுப்பினராக ஆளுனர் நியமனம் செய்த போதும்கூட, அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் தனது சமுதாயத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி, பல கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து பல உரிமைகளையும் பெற்றுக்கொண்டமை வரலாறாகும். இவ்வாறு 1889 முதல் 1917ஆம் ஆண்டுவரை நால்வர் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
“டொனமூர் அரசியல் யாப்பின் அடிப்படையில் 1931ஆம் ஆண்டில் இலங்கை முழுத்தீவும் 50 தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேர்தலில் எச். எம்.மாக்கான் மாக்கார் என்பவர் மட்டுமே முஸ்லிம்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட போதும் 1936இல் நடந்த தேர்தலில் எந்த முஸ்லிமும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1931இல் எம். எம். மாக்கான் மாக்கார் கூட மட்டக்களப்பு தெற்கு தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது. அப்போதிருந்த மட்டக்களப்பு தெற்கு தேர்தல் தொகுதி என்பது மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மொனராகலை மாவட்ட எல்லையிலுள்ள கும்புக்கன் ஓயாவரையுள்ள மிக நீண்ட பிரதேசமாகும்.
பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவ அதிகரிப்பு
பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்து செல்வதையும், இதற்கான முக்கிய காரணம் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையை நாம் குறிப்பிடலாம்.
இவ்வாறான முஸ்லிம் பிரதிநிதித்துவ அதிகரிப்பை 1947ஆம் ஆண்டிலிருந்தே நாம் காண முடிகிறது.
1947 இல் – 08 முஸ்லிம் பிரதிநிதிகள்
1952 இல் – 07 முஸ்லிம் பிரதிநிதிகள்
1960 இல் (மார்ச்) – 12 முஸ்லிம் பிரதிநிதிகள்
1960 இல் (ஜூலை) – 15 முஸ்லிம் பிரதிநிதிகள்
1965 இல் – 14 முஸ்லிம் பிரதிநிதிகள்
1970 இல் – 12 முஸ்லிம் பிரதிநிதிகள்
1977 இல் – 16 முஸ்லிம் பிரதிநிதிகள்
1989 இல் – 23 முஸ்லிம் பிரதிநிதிகள்
1994 இல் – 23 முஸ்லிம் பிரதிநிதிகள்
2000 இல் – 23 முஸ்லிம் பிரதிநிதிகள்
2001 இல் – 26 முஸ்லிம் பிரதிநிதிகள்
2004 இல் – 27 முஸ்லிம் பிரதிநிதிகள்
2010 இல் – 19 முஸ்லிம் பிரதிநிதிகள்
2015 இல் – 22 முஸ்லிம் பிரதிநிதிகள்
2020 இல் – 19 முஸ்லிம் பிரதிநிதிகள்
தேசியக் கட்சிகளில் முஸ்லிம்கள்
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்களில் 1989ஆம் ஆண்டுவரை முஸ்லிம்கள் பெரும்பாலும் தேசியக் கட்சிகளிலேயே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். ஒரு சில பாராளுமன்ற தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்கள். இலங்கை ஜனநாயக குடியரசின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலிலேயே (1947இல்) எம்.எம்.இப்ராஹீம் என்பவர் பொத்துவில் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து பல பாராளுமன்ற தேர்தல்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் சுயேட்சையாக போட்டியிட்டு பலமுறை பாராளுமன்றம் சென்றார்கள். தேசியக் கட்சிகள் என்றவகையில் 1946இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும், 1951இல் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் இவ்விரு கட்சிகளிலுமே தொடர்ந்து போட்டியிட்டு அக்கட்சிகளின் மூலமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமன்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி வகித்து தனது சமூகத்துக்கும், நாட்டிற்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். இவ்விரு தேசியக் கட்சிகளிலும் எவ்வித குறைபாடுகளுமின்றி பல முஸ்லிம் தேசியத் தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது சமூகத்துக்கும் நாட்டுக்கும் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளார்கள்.
சேர் ராஸிக் பரீத், டாக்டர் எம்.ஸி.எம். கலீல், கலாநிதி ஏ.ஸி.எஸ்.ஹமீத், எம்.எச் முஹம்மது, பாக்கிர் மாக்கார், ஜாபிர் ஏ.காதர், எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார், ஏ.ஆர்.ஏ. மன்சூர் போன்ற முஸ்லிம்களின் தேசியத் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் பலமுறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் தொடர்ந்தேச்சியாக பதவி வகித்த அதேவேளை, கலாநிதி பதியுதீன் மஹ்மூத், அலவி மௌலானா, ஏ.எல்.அப்துல் மஜீத், எம்.சி.அஹ்மத், எம்.ஹலீம் இஷாக் போன்ற முஸ்லிம் தலைவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் கடமையாற்றியுள்ளார்கள்.
இவர்களில் பலர் சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகளும் அதி உயர்ந்த பங்களிப்புகளும் இந்நாள்வரை எமது சமூகத்தால் மட்டுமன்றி, நாட்டின் அனைத்து சமூகங்களாலும், அரசியல் ஆய்வாளர்களாலும் சிலாகித்துப் பேசப்படுகின்றது. எழுதப்படுகின்றது. குறிப்பாக சேர் ராஸிக் பரீத் அவர்களின் சேவைகளை முஸ்லிம் சமூகம் என்றும் மறவாது. வரலாற்று ரீதியாக கல்வியில் மிகப் பின் தங்கியிருந்த முஸ்லிம் சமூகத்துக்கென நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் முஸ்லிம் கிராமங்களில் 288 பாடசாலைகளை நிறுவியதோடு சகல வசதிகளும் கொண்ட 3 மத்திய மகா வித்தியாலயங்களை எருக்கலம்பிட்டி, காத்தான்குடி, அளுத்கமை போன்ற முஸ்லிம் ஊர்களில் ஆரம்பிக்க அரும்பாடுபட்டார். சேர். ராஸிக் பரீதின் பிரேரணையின் அடிப்படையிலேயே 1941இல் அட்டாளைச்சேனை, அளுத்கமை என்ற இரு நகர்களிலும் முஸ்லிம்களுக்கென தனியான ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலைகளில் அரபு மொழி பாடத்தை அறிமுகப்படுத்தி, அதை கற்பிக்க மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்தார். அவ்வாறே பொத்துவில் தொகுதியில் 1947 இல் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எம்.இப்றாஹீம் என்பவரின் முயற்சியினாலேயே இன்று கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை, அம்பாறை என பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலுமுள்ள இலட்சக்கணக்கான நெல் வயல்களுக்கான தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து இன்றுவரை அம்பாறை மாவட்டத்தை பொன் கொழிக்கும் வயல் நிலமாக மாற்றுவதில் பெரும் சேவையாற்றினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே தொடர்ந்து (இறக்கும்வரை) அங்கத்துவம் பெற்றிருந்த கலாநிதி பதியுதீன் மஹ்முத் அவர்கள் அக்கட்சியின் நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 1960 முதல் கல்வி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் 1963இல் சுகாதார வீடமைப்பு அமைச்சராகவும் 1970இல் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஆற்றிய சேவைகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தனது இரண்டு பதவிக் காலத்திலும் சுமார் 10 வருடங்கள் கல்வி அமைச்சராக பதவி வகித்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தேசியக் கல்வி வளர்ச்சிக்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி உயர்ச்சிக்கும் பாரிய சேவைகளை செய்தவராவார். முஸ்லிம் சமூகம் வேலைவாய்ப்பிலும், பல்கலைக்கழக அனுமதியிலும் மிகவும் அதல பாதாளத்திலேயே அப்போது இருந்து வந்தது. எனவேதான் ஆசிரிய நியமனத்தில் 80:12:08 எனும் விகிதாசாரத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார். அவ்வாறே அவரால் அறிமுகம் செய்யப்பட்ட மாவட்ட கோட்டா அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி முறைமையினால் பின்தங்கியிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமன்றி இலங்கையின் குக் கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி அறவே கிடைத்திராத கிராமப்புற சிங்கள, தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெறும் பெரும்வாய்ப்பு கிட்டியது.
தேசியக் கட்சிகளில் அங்கத்துவம்பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் பல முஸ்லிம் தலைவர்கள் சேவை செய்துள்ளார்கள். ஒரு பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றால் இவ்வாறான அமைச்சு பதவிகள் அவர்களுக்கு கிடைக்கும். அடுத்த தேர்தலில் தமது கட்சி தோல்வியுற்றால் இவ்வாறான அமைச்சர் பதவிகள் கிடைக்காமல் போகும். சிலநேரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கூட தெரிவுசெய்யப்பட்டிருக்கமாட்டார்கள். இவ்வாறான துரதிஷ்டவசமான காலப்பகுதிகளில் இவர்களில் யாருமே கட்சி மாறியதாகவோ தமது கட்சியின் கொள்கைப் பிரகடனம், யாப்புகளுக்கு முரணாக செயற்பட்டதாகவோ முஸ்லிம் தலைவர்கள் விடயத்தில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறான வரலாறுகளுமில்லை.
தனித்துவ கட்சிகளும் முஸ்லிம்களும்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தமது சமூகம் சார்ந்த கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1986 இல் தோற்றம் பெற்று 1988ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நான்கு முஸ்லிம்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், தேசியப் பட்டியல் மூலம் ஒருவருமாக ஐவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தின் பின்னரே முஸ்லிம் சமயம் சார்ந்த பல உதிரிக் கட்சிகள் தோற்றம் பெற்றன. தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, வடக்கு கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய முன்னணி, முஸ்லிம் விடுதலை முன்னணி என்பன போன்ற கட்சிகள் இவ்வாறு முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு தோற்றம் பெற்றன.
இவ்வாறான கட்சிகளின் தோற்றம் யாவும் தமது சுயநல வேட்கையையும் தாம் எதிர்பார்த்திருந்த அமைச்சுப் பதவிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கிடைக்காமையினாலேயே சில தனிப்பட்ட நபர்களின் விருப்பு, முயற்சிகளின் அடிப்படையில் தோற்றம் பெற்றமையை அவற்றின் வரலாற்றின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி சமயம் சார்ந்த தனித்துவக் கட்சிகளிலிருந்து தேசியக் கட்சிகளுக்கும் சிலர் தாவி, தமது சுயநல ஆசையை (அமைச்சு பதவியை) அடைய முயற்சி செய்தார்கள்.
கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தோற்றம் பெற்ற ஸ்ரீ.ல.மு.கா. கட்சியில் ஆரம்ப அங்கத்தவர்களாக இணைந்து போட்டியிட்டு, பல அமைச்சு பதவிகளையும் பெற்றிருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவருமே கிட்டத்தட்ட தமது அரசியல் அபிலாஷைகளுக்காக தமது தாய்க் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டு, பல உதிரிக் கட்சிகளை உருவாக்கியதோடு, தேசியக் கட்சிகளில் இணைந்து தமது தாய்க் கட்சியையே எதிர்த்து சின்னா பின்னமாக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்கள். கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ .ல.மு. காங்கிரஸில் அதி உயர் பதவியில் அமர்த்தப்பட்ட யாருமே அக்கட்சியில் தொடர்ந்து இருக்கவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு கசப்பான உண்மையாகும். சேய்கு இஸ்ஸதீன், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், பஷீர் சேகுதாவூத் , எஸ். நிஜாமுதீன், எம்.ரி. ஹஸனலி, ஏ.எம்.எம். நௌஷாத் என்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் இவர்களில் அடங்குவர்.
மாற்றுக் கட்சிகளில் போட்டியிட்டது மட்டுமன்றி, தம்மை முஸ்லிம் சமுதாயத்துக்கே அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை பூண்டோடு அழிக்கும் சதி முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமையை இலங்கையின் அரசியல் கள நிலவரத்தை தெரிந்த சாதாரண பொது மகனும் அறிவார்.
இவர்களில் யாருமே வெளிப்படையாக நோக்குமிடத்து தமது சமூகத்துக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாதவர்களாகவே எனது ஆய்வுக்கு தென்படுகிறார்கள். இவர்களில் ஓரிருவர் தமது அரசியல் இருப்பை தக்கவைக்கும் நோக்கில் தமது ஊரை அல்லது தமது தேர்தல் தொகுதியை ஒரு சில விடயங்களில் (குறிப்பாக அழகுபடுத்துவது, கட்டிடங்கள் எழுப்புவது) கட்டி எழுப்பியிருந்தாலும் கூட மஸ்லிம் அரசியல் தலைவர்களான சேர் ராசிக் பரீத், ஏ.ஸி.எஸ். ஹமீத், எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற தீர்க்கதரிசனமிக்க முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சமூகத்துக்கான பங்களிப்பில் ஐந்து வீதத்தைக் கூட செய்திருக்கமாட்டார்கள். மாறாக முஸ்லிம் சமூகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தவர்களாகவே இவர்களை வரலாற்றில் இனம் காண முடியும். அவர்களில் ஒரு சிலர் இருபது வருடங்களுக்கு மேல் பாராளுமன்றக் கதிரையில் அமர்ந்திருந்த போதும் கூட, தமது சமூகத்துக்கல்ல, தமது தேர்தல் தொகுதி மக்களுக்குக் கூட எவ்வித சேவைகளும், பங்களிப்பும் செய்யாதவர்களாகவும் சிலரை என்னால் இனங்காட்ட முடியும்.
துரதிஷ்டவசமாக, முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இச்சமூகத் துரோகிகளைப் பற்றிய ஆழமான ஆய்வுகள் முஸ்லிம் ஆய்வாளர்களால் செய்யப்படவுமில்லை அல்லது அவ்வாறு செய்யப்பட்டவைகளும் சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தப்படவில்லை.
மாற்று சமூகங்களின் மத்தியில் அவமானம்
ஸ்ரீ. ல. மு.கா. கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பலர் தேசியக் கட்சிகளில் தமது சுயநல அதிகார வேட்கைக்காக இணைந்து கொண்டதால், அக்கட்சிகளில் பல தசாப்தங்களாக நிலை கொண்டிருந்த அக்கட்சிகளின் ஆரம்ப அங்கத்தவர்களின் வெறுப்பை மாத்திரமன்றி, மற்றைய சமூகங்களின் வெறுப்பையும் அவமானத்தையும் சம்பாதிக்க வேண்டிய துரதிஷ்ட நிலை அவ்வாறு சேர்ந்து கொண்டவர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமுதாயத்துக்கு கூட ஏற்பட்டது. இவ்வாறு முஸ்லிம் சமூகத்தையே அவமானப்படுத்தும் பல ஊடகச் செய்திகளும் கட்டுரைகளும் கூட குறிப்பாக சிங்களப் பத்திரிகைகளில் பலமுறை பிரசுரிக்கப்பட்டதை நாமறிவோம். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ.ல. மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சிக்கோ, தலைமைக்கோ தெரியாமல் தமது தந்தை, சகோதரர்களுடன் சென்று தேசியக் கட்சியின் பிரதமரை பின்வழியால் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று சந்தித்து அமைச்சுப்பதவியை பெற முயன்றமை பின்னர் சிங்கள நாளிதழில் செய்தியாக வெளிவந்த போது அவரின் கட்சி மட்டுமல்ல, முஸ்லிம் சமூகமே வெட்கித் தலை குனிந்தது. காட்டிக் கொடுக்கப்பட்டது. சென்ற பாராளுமன்ற காலத்தின் போது கூட முஸ்லிம் பிரச்சினைகள் பற்றி உரத்துப் பேசி, முஸ்லிம்களின் சில உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் புத்திஜீவிகளால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஓரணியில் திரட்ட முயற்சித்த போது ஓரிரு பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒளித்திருந்தமை பின்னர் வெளிவந்தபோது முஸ்லிம் சமூகமே வெட்கித் தலை குனிந்தது.
இவ்வாறு தமது சுயநல அரசியல் இருப்புக்காகவும், அமைச்சர் போன்ற உயர் பதவிகளை பெறுவதற்காகவும் முஸ்லிம் சமூகத்தையே தாரை வார்த்துவிட்டு தம்மைத் தெரிவு செய்த மக்களையும், நட்டாற்றில் விட்டு விட்டு, அந்நிய கட்சிகளின் பின்னாலும், ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பின்னாலும் அலைந்து திரிகின்ற மிகக் கேவலமான காட்சிகளை முஸ்லிம் சமூகத்திலேயே தினமும் காண்கிறோம். எமது சகோதர இனமான தமிழர்கள் மத்தியில் இவ்வாறான கேவலமான காட்சிகளை நாம் என்றும் காண முடியாது.
இருபதாவது திருத்தச் சட்டமும் முஸ்லிம் எம்.பி.க்களும்
இப்போது ஆட்சியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தாம் பதவிக்கு வந்தவுடன் இலங்கை அரசியல் அமைப்பில் இருபதாவது திருத்தச் சட்டத்தை கொண்டு வரவும் அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக் கொள்ளவும் பகீரதப் பிரயத்தனம் செய்தது. இவ்வரசியல் திருத்தச் சட்டத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக அரசியலையும், மனித உரிமைகளையும் எமது நாட்டு மக்களின் ஜனநாயகப் பண்புகளையும் குழிதோண்டிப் புதைக்கும் பல சரத்துக்கள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, நடு நிலையான புத்திஜீவிகளும் ஆதாரங்களுடன் மக்கள் முன் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள். இதனால் பொதுஜன பெரமுன கட்சிக்குள்ளேயே இத்திருத்த மசோதாவுக்கு எதிரான பலமான அலை ஒன்று மேலேழும்பி திருத்தம் கொண்டுவர முயற்சித்த ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்தது. இம்மசோதாவை எப்படியும் வென்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டி பகீரத முயற்சியில் ஈடுபட்டு, சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும் வளைத்துப் போடவும் முயற்சி எடுக்கப்பட்ட போது இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே மிக இலகுவாக அவர்களின் வலையில் சிக்கினார்கள். இராஜாங்க அமைச்சு, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் போன்ற சில குறுகிய பதவிளைக் காட்டி இலகுவாக வளைத்துப் போட அவர்களால் முடிந்தது. அப்போது கூட முஸ்லிம் சமூகம் மிகவும் பலமாக பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணீர் விட்டழுதுகொண்டிருந்தது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், மத்ரஸாக்களின் எதிர்காலம், முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்வதை தடுத்தல் போன்ற எவ்வித பிரச்சினைகளையும் இச்சுயநலவாதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைக்கவில்லை என்பது வெள்ளிடைமலையாகும்.
இவ்வளவுக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்கும் போது அதன் ஆரம்பகர்த்தாக்கள் உட்பட பௌத்த மத குருமார்களும் பிற கட்சியிலுள்ள முஸ்லிம் எம்பிக்களை எக்காரணம் கொண்டும் உள்வாங்கவோ, பதவிகளைக் கொடுக்கவோ கூடாது என மிக அழுத்தத்தைக் கொடுத்து வந்ததோடு, அதை ஊடகங்கள் மூலம் பகிரங்கமாகவும் வெளியிட்டு வந்தார்கள். இச் செய்திகளை பார்க்கும் எந்த முஸ்லிமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானகரமான நிலை அப்போது ஏற்பட்டது.
ஈற்றில் தமது பதவிகளை மாத்திரமே கோரிக்கையாக வைத்து இருபதாவது திருத்தத்திற்கு இந்த ஏழு பேரும் கை உயர்த்தியதன் மூலம் மிகக் குறைந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திருத்த மசோதாவை பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டது. இதன் மூலம் இதை பலமாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் மற்றும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தவர் மத்தியில் முஸ்லிம்கள் தலைகுனிய வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு ஆதரவளித்த ஏழு முஸ்லிம் எம்பிக்களில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட அபிவிருத்திக் குழு பிரதித் தலைவர் பதவி கிடைத்துள்ளது. எமக்கும் இராஜாங்க அமைச்சு கிடைக்கும் என இன்றும் கூட வெட்கமின்றி ஊடகங்களில் பகிரங்கமாக இவர்களில் சிலர் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தையே மற்றவர்கள் எள்ளி நகையாட வைக்கிறது.
அவ்வாறான மற்றொரு சம்பவம் அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அமைச்சர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும் இதே முஸ்லிம் எம்பிக்களால் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நால்வர் பாராளுமன்றத்துக்கே வராமலும் மூவர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் இப்பிரேரணை தோல்வியடைந்தது. முஸ்லிம் சமூகம் மீண்டும் ஒரு முறை இவர்களால் தலை குனிய வைக்கப்பட்டதுடன் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli
Post Disclaimer
Disclaimer: முஸ்லிம்களை தலைகுனியச் செய்யும் பிரதிநிதிகள் By Vidivelli - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.