ஆகஸ்ட் 26ம் திகதி வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று புதிய தலிபான் நிர்வாகம் நிராகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவோ அல்லது வேறு எந்த மேலத்தேச நாடோ இதுவரை தலிபான்கள் மீது குற்றம் சாட்டவும் இல்லை.
இந்தத் தாக்குதல் நடைபெற ஒரு சில மணி நேரத்துக்கு முன் மேற்குலக ஊடகங்கள் காபுலில் ஒரு குண்டுத் தாக்குதல் நிச்சயம் இடம்பெறலாம் என்ற ரீதியில் எச்சரிக்கையையும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வந்தன. அதேபோல் தாக்குதல் இடம்பெற்ற ஒரு சில மணி நேரத்தில், அமெரிக்கா ISIS இயக்கத்தின் மீது குற்றம் சாட்டியது மட்டும் அன்றி அதற்கு பொறுப்பானவர் என்று அடையாளம் காணப்பட்ட அப்துல் றஹ்மான் அல் லொகாரி என்பவர் மீது தாக்குதல் நடத்தி அவரைக் கொலை செய்தும் விட்டது. இவர் ISIS கொஸான் என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானின் IS உள்ளகப் பிரிவொன்றின் உறுப்பினர். விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த அமைப்பே உரிமை கோரி இருந்தது.
தலிபான்கள் அறிவித்த புதிய அமீரக அரசு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னரே இடம்பெற்ற இந்தத் தாக்குதல் அங்கு பெரும் குழப்ப நிலையை உருவாக்கியது. மிக விரைவாக பலத்த எதிர்த்தாக்குதல் எதுவுமின்றி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் உலகம் முழுவதிலும் இருந்தும் தலிபான்களோடு செயலாற்றுவது பற்றி வௌ;வேறுவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானின் குழுக்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் செயற்படும் எந்தவொரு பயங்கரவாத குழுக்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஒரு குறிப்பை மட்டுமே ஆப்கானிஸ்தான் தொடர்பாக வெளியிட்டுள்ளது. தலிபான்கள் இனிமேலும் உலகளாவிய ரீதியில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பிரிவினராக இருக்கப் போவதில்லை என்பதற்கு இது முதலாவது தெளிவான ஒரு சமிக்ஞையாகும்.
எவ்வாறாயினும் எதிர்ப்பார்க்கப்பட்ட படியே மேலைத்தேச மதச் சார்பற்ற ஆட்சியாளர்களிடம் இருந்தும், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட சர்வாதிகாரிகளிடம் இருந்தும் எச்சரிக்கை தொனியே வெளிப்பட்டுள்ளது. ஆனால் மக்களிடம் இருந்து இதுவரை தலிபான்களுக்கு பெரும் வரவேற்பே கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் மிகவும் மோசமானவர்களாகக் காணப்படுகின்றவர்கள் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆட்சியாளர்களே. இவர்கள் இஸ்லாத்தில் இருந்தும் முஸ்லிம்களிடம் இருந்தும் வெகு தூரம் விலகிச் சென்று அரபு நாடுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்பு தலைமையில் மேற்கொள்ளப்படும் யுத்தங்களிலும் தாக்குதல்களிலும் தீவிரப் பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் அவர்களது சொந்த மக்களாலேயே எதிர்க்கப்படும் கொடுங்கோல் அடக்குமுறை ஆட்சியாளர்களாகவே காணப்படுகின்றனர். தங்களது சொந்த இருப்புக்காக அமெரிக்காவிடமும் ஐரோப்பிய சக்திகளிடமும் தஞ்சம் புகுந்துள்ள இவர்கள் தமது சொந்த மக்களைக் கண்டு அச்சம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். பாரிய அளவிலான ஊழல்களைப் புரிந்து வந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் அரசை, அமெரிக்கா முற்றிலும் எதிர்பாராத விதத்தில் கைவிட்டது போல் தங்களையும் கைவிட்டு விடலாம் என்ற அச்சம் தற்போது இந்த ஆட்சியாளர்கள் மத்தியில் தோன்றி உள்ளது.
ஈராக்கில் இருந்து ஒபாமா நிர்வாகம் (விரும்பியோ விரும்பாமலோ) தனது படைகளை விலக்கிக் கொண்டது முதல,; அதேபோல் அமெரிக்க நிர்வாகம் 2015ல் ஈரானுடன் அணு சோதனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான உடன்படிக்கைளை செய்து கொண்டது முதல் வளைகுடா சர்வாதிகரிகளின் நரம்புகளில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் தான் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக இரட்டைக் கொடுங்கோலர்கள் இஸ்ரேலுடனான தமது நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டனர். பிராந்தியத்தின் பிரதான உந்து சக்தியாக இஸ்ரேலைக் கருதி இவர்கள் தமது நெருக்கத்தை மேலும் அதிகரித்து வருகின்றனர். இந்த அரபு நாடுகளின் பிரதான உளவுச் சேவை தொழில்நுட்ப வளங்களை விநியோகிக்கும் நாடாக தற்போது இஸ்ரேல் மாறி உள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் வளைகுடா கூட்டணிக்கும் இடையிலான பிணக்குகள் கடந்த ஆண்டுகளில் மேலும் விரிவடைந்துள்ளன. கத்தார் மற்றும் ஈரான் ஆகிய தமக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய நாடுகளுடன் தலிபான்கள் தமது உறவை அதிகரித்துக் கொண்டுள்ளமையும் இதற்கு முக்கிய காணமாகும்.
எவ்வாறாயினும் அரபு நாடுகளில் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்புக்கள் அரபு உலகுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல் தான் என்ற கருத்தையே வலியுறுத்தி உள்ளன. அரபு உலகின் பிரதான எதிரியும் அச்சுறுத்தலான நாடும் இஸ்ரேல் அல்ல ஈரான் என்ற கருத்தை நிறுவ அரபுலக ஆட்சியாளர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள முயற்சிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த ஒரு தசாப்தத்தில் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்தில் ஈரான் தலிபான்களுக்கு புகலிடமும் ஆதரவும் அளித்து வந்துள்ளது. ஈரானின் மஷத் நகரில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளதாகம் அதில் போதிய இராணுவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. காபூல் நகரில் உள்ள ஈரானிய தூதரகமும் திறந்தே உள்ளது. இது தலிபான்கள் மீதான இராஜதந்திர அங்கீகாரத்தைக் குறிக்கின்றது. இரு தரப்பும் ஒத்துழைப்புக்களைப் பரிமாறிக் கொள்ள இன்னும் பல காரணங்களும் உள்ளன.
ஆப்கானிஸ்தானுடனான அண்டை நாடான பாகிஸ்தானின் உறவும் நல்ல முறையிலேயே உள்ளது. பாகிஸ்தானிய அரசும் இராணுவமும் ஒற்றை நோக்கம் கொண்ட நிறுவனங்கள் அல்ல. அவை வௌ;வேறு விதமான நலன்களைக் கருத்தில் கொண்ட குழுக்கள். இந்த வகையில் இந்தக் குழுக்கள் பொதுவாகவே தலிபான்களின் வெற்றிக்குச் சாதகமானவை. தலிபான்கள் காபுலைக் கைப்பற்றியப் பின் தலிபான்கள் அடிமைத்துவத்தை முறியடித்துள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தப் பிராந்தியத்தின் இன்னொரு முக்கிய நாடான இந்தியாவின் மூலோபாயம் ஆப்கானிஸ்தானில் தோல்வி கண்டுள்ளது. அவர்கள் தலிபான்களுடன் உறவுகளை வளர்க்க வேண்டுமானால் அதற்காக நிறையப் பணியாற்ற வேண்டி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள மிகச் சொற்பமான தெரிவுகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பத்தி எழுத்தாளர் பினாக் ரன்ஜன் சக்கரவர்த்தி தலிபான்களின் கரங்கள் மேலோங்கி உள்ள ஆப்கானிஸ்தான் அரசை விட்டு விலகி இருக்க புதுடில்லியால் முடியாது. துருக்கி, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகள் அங்கு சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இந்தியா தனது இராஜதந்திரத்தை அங்கு மெருகேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தலிபான்கள் வெறுமனே பாகிஸ்தானின் பிரதிநிதிகள் என்று புதுடில்லி கூறுகின்றது. ரஷ்யா ஆப்கானிஸ்தானின் அங்கீகரம் பெற்ற ஒரு பிரிவாக தலிபான்களை நோக்குகின்றது. அந்த நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் தலிபான்களுக்கு பிரதான பங்கு உள்ளதாக ரஷ்யா கருதுகின்றது. அந்த வகையில் தலிபான்களுடன் ஒத்துழைப்பது ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் பிரதான மூலோபாயமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் ராஜதந்திர ரீதியான அனுகுமுறையும், விவேகமும், விட்டுக் கொடுப்பும் இல்லாவிட்டால் அது ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைளை முற்றாக சீர்குலைத்து விடும் என்று சக்கரவர்த்தி எச்சரித்துள்ளார்.
மோடி அரசின் பிரதிமை அங்கு பூச்சியமாகவே உள்ளது. இந்த நிலை அங்கு இந்தியாவின் பரம வைரிகளான பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவற்றுக்கு அப்பால் எல்லா பிராந்திய நாடுகளும் தத்தமது புவியியல் பெருளாதார நிலைமைகளின் அடிப்படையிலேயே ஆப்கானிஸ்தானை நெருங்கி வருகின்றன. விஷேடமாக ரஷ்யா.
சில ஆய்வாளர்களின் கருத்துப்படி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் பதவிக்கு வந்துள்ளமையானது இந்தியாவுக்கு ராஜதந்திர ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு இந்தியா தான் மிகவும் பின்தங்கிய அல்லது அனுகூலமற்ற தரப்பாகக் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள தனது ராஜதந்திர நிலையங்களை மூடி அங்கு தமது பணிகளை நிறுத்தி ராஜதந்திரிகளையும் ஏனைய பிரஜைகளையும் திருப்பி அழைத்துக் கொண்ட முக்கிய நாடாக இந்தியா உள்ளது. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில் பிராந்தியத்தின் அதன் முக்கிய பங்காளி என்ற நிலையில் இருந்து இந்தியா இந்த விடயத்தில் மிகவும் அனுகூலமற்ற நாடு என்ற நிலைக்கு வந்துள்ளது என்று அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் வில்ஸன் நிலையத்தின் ஆசியத் திட்ட பிரதிப் பணிப்பாளர் மைக்கல் கூகிள்மென் என்பவரும் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி அங்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களில் முதலீடு செய்தது. ஆப்கன் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கியது. 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அந்த நாட்டின் பாராளுமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்க உதவியது. 38 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் நல்லெண்ணத்தையும் பெற்றது. கடந்த வருடம் 2020 ஆப்கானிஸ்தான் மாநாட்டில் பேசும் போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்தியாவின் 400க்கும் அதிகமான திட்டங்களின் மூலம் ஆப்கானிஸ்தானில் இந்தியா தடம் பதிக்காத இடமே கிடையாது என்று கூறினார்.
எவ்வாறேனும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்தின் படி தலிபான் பிரதித் தலைவரின் தோஹாவில் உள்ள அலுவலகம் இந்தியா இந்த உப கண்டத்தில் மிகவும் முக்கியமாதோர் நாடு எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பொருளாதார, கலாசார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை கடந்த காலங்களைப் போலவே இந்தியாவுடன் தொடர்ந்தும் பேண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் மிகவும் சுவாரஷ்யமான விடயம் எதுவெனில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆப்கானிஸ்தான் விடயம் பற்றி இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் தொடர்பு கொண்டு அதே விடயம் பற்றி பேசி உள்ளார் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் பற்றி ரஷ்யா பாகிஸ்தானுடன் மிகவும் காரசாரமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி இருதரப்பும் விரிவாக ஆராய்ந்துள்ளன. வன்முறைகளைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் குழுக்கள் மத்தியில் கலந்துரையாடல்களுக்கு வழியமைத்து சகல தரப்பு மக்களதும் நலன்களை உள்வாங்கக் கூடிய ஒரு அரசை அங்கு நிறுவுவதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு வடிவங்களின் அடிப்படையிலான அனுகுமுறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க புடினும் இம்ரான் கானும் இணங்கி உள்ளனர். அத்தோடு பிராந்திய ஸ்திரப்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஷங்காய் கோப்பரேஷன் அமைப்பின் ஆற்றல்களைப் பயன்படுத்தவும், பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் அச்சுறுத்தல் என்பவற்றை எதிர்த்துப் போராடவும் இவ்விரு தலைவர்களும் இணங்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரமும் அங்கீகாரமும் பெற்ற அந்த நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் பிரதான பாத்திரம் வகிக்கக் கூடிய ஒரு பிரிவாகவே தலிபான்களை ரஷ்யா பார்க்கின்றது. அந்த வகையில் ஆப்கனில் தலிபான்களோடு ஒத்துழைப்பது ரஷ்யாவின் முக்கிய கொள்கையாகும்.
இது சம்பந்தமாக ரஷ்யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வௌ;வேறு மட்டத்திலான தொடர்புகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். எதிர்வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் விடயத்தில் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதே கிரம்ளின் நிர்வாகத்தின் பிரதான நிலைப்பாடாகும் என்றே ரஷ்ய தகவல்கள் மேலும் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானின் மீள் கட்டமைப்பு மற்றும் இதர பிரிவுகளில் ரஷ்யாவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் செயற்பாடுகள் மேலோங்கவும் இதனால் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
சீனாவும,; ஆப்கானிஸ்தானுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்களுக்கான கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது. ரஷ்யாவுடன் நலன்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானில் எதிர்கால பாரிய பங்களிப்புக்கு சீனா தயாராகவே உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றில் நலன்களைப் பகிர்ந்து கொள்ள ரஷ்யாவும் சீனாவும் நெருங்கிய தொடர்பாடல்களை மேற்கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் மீள் கட்டமைப்பு உற்பட இதர விடயங்களில் இவ்விரு நாடுகளும் பிரதான பங்காளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகின்றது. அமெரிக்கா அங்கு ஏற்படுத்தியது போன்ற குழப்ப நிலையையும் மோதல்களையும் உருவாக்காமல் எதிர்காலத்தில் அமைதியான பங்களிப்புக்கு இரு தரப்பும் காத்திருக்கின்றன.
உலக நாடுகள் புதிய அப்கானிஸ்தான் நிர்வாகத்தோடு உறவுகளை ஸ்தாபித்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், இலங்கையில் பயங்கரவாதம் பற்றி நன்கு அறிந்த பண்டிதர்கள் நாங்கள் தான் என தம்மை தாமே போற்றிக் கொள்ளும் நபர்களும் உலகை அமெரிக்க கண்ணாடி அணிந்து பார்க்கின்றவர்களும் தலிபான் அரசோடு இலங்கை உறவுகளை ஏற்படுத்தக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.
Post Disclaimer
Disclaimer: ஆப்கானிஸ்தானில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த மீண்டும் அதிகாரப் போட்டிக்குத் தயாராகும் பிராந்திய சக்திகள் - லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.