தமது பூர்வீகக் காணிகளைப் பாதுகாப்பதற்காக பலஸ்தீன மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கி இன்னமும் முடிவின்றி தொடருகின்றது. அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் அவர்களைக் காட்டிக் கொடுத்து கைவிட்டுள்ளதால் அவர்கள் தற்போது தனித்துப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே பலஸ்தீன மக்களின் காணிகளை சட்ட விரோதமாக அபகரிக்கும் சியோனிஸ யூதர்களின் செயற்பாடு இன்றும் தொடருகின்றது. பலஸ்தீன பூமியில் 1947ல் பிரிட்டிஷ் ஆதிக்க சக்தியால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலாக பலஸ்தீன மக்களின் காணிகளை தொடர்ந்து கபளீகரம் செய்து வருகின்றது. இஸ்ரேலின் இந்த சட்ட விரோத போக்கிற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என எல்லா சக்திகளும் பக்க பலமாக இருந்து வருகின்றன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சியோனிஸ யூதர்கள் இன ஒழிப்பு படுகொலைகளைப் புரிந்து வருகின்றனர். 1940களில் பலஸ்தீனர்களை அவர்களது தாயக பூமியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் 700000த்துக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து துரத்தப்பட்டனர். அதன் பிறகு தான் எல்லைகளற்ற இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டது.
அதன் பிறகு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட யுத்தங்கள் பலஸ்தீன பூமியை இஸ்ரேலுடன் இணைத்து அதன் எல்லைகளை விரிவு படுத்தியது. 1976 யுத்தத்தில் கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை, கோலான் குன்று, காஸா பள்ளத்தாக்கு என்பன உற்பட பல பகுதிகள் இஸ்ரேலால் கைப்பற்றமையும் இதற்குள் அடங்கும்.
கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பூமியின் சில பகுதிகளை ஒரு துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டே இஸ்ரேல் தனது அண்டை நாட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுக்களையும் நடத்தி உள்ளது. வெற்றுக் கரங்களுடன் போராடிய பலஸ்தீன மக்களுக்கு துரோகமே இழைக்கப்பட்டது. இப்போது அவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு எவரும் உதவுவதற்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் தமது பூர்வீகக் காணியைக் காப்பாற்றுவதற்காக மிகவும் துணிச்சலோடு போராடி வரும் ஒரு இடம் தான் வாதி அல் றபாபா என்ற இடம். இது ஜெருஸலத்தின் ஒரு பகுதியாக இருந்து 1967ல் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது.
வாதி அல் றபாபாவில் வாழும் மக்கள் அது தமக்கு சொந்தமான இடம் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் வைத்துள்ளனர். இவை துருக்கிப் பேரரசின் காலத்தில் இருந்து தம்மிடம் இருந்து வரும் ஆவணங்கள் என அந்த மக்கள் கூறுகின்றனர். இஸ்ரேலின் புல்டோஸர் வாகனங்களை எதிர்த்து நின்று இந்த மக்கள் போராடி வருகின்றனர். அண்மைக் காலத்தில் நெருக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய நோய் பரவல் சூழலையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாதி அல் றபாபாவில் எஞ்சியிருந்த சில மதில்களையும் இஸ்ரேலிய புல்டோசர்கள் கடந்த வாரம் இடித்துத் தள்ளியுள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கiயும் அவை பிடுங்கி வீசியுள்ளன. தனது ஒரு ஹெக்டயர் நிலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஷாதிஅல்சம்ரின் என்பவரின் குடும்பத்தவர்களும் அவர்களது அயலவர்களும் அந்த கனரக வாகனங்களுக்கு எதிரே முழந்தாளிட்டு நின்று போராடி உள்ளனர்.
வாதி அல் றபாபா சுமார் 21 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்டது. ஜெரூஸலத்தைச் சேர்ந்த சுமார் 800 பலஸ்தீனர்கள் இங்கு வசிக்கின்றனர். நிலத்தை ஆக்கிரமித்து விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினரின் தாக்குதல்கள் காரணமாக இவர்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அல் அக்ஸா பள்ளிவாசலை எதிர்கொண்ட நிலையில் காணப்படும் வாதி அல் றபாபாவின் ஒரு பகுதியையே இந்தப் படத்தில் காண்கின்றீர்கள்
இஸ்ரேலியர்களை எதிர்த்துப் போராடி வரும் ஷாதிஅல்சம்ர் என்ற பலஸ்தீன இளைஞர் தமது காணி ஒரு தனியார் சொத்து எனக் கூறுகின்றார். அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் தமது மக்களிடம் உள்ளதாகவும் அந்த ஆவணங்கள் துருக்கிப் பேரரசு காலத்து பழமையான ஆவணங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அஸீல் ஜுண்டி என்ற பத்தி எழுத்தாளரின் கருத்துப்படி கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 பிரச்சினை தலையெடுத்தது முதல் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தம்மை எதிர்த்துப் போராட மிகக் குறைந்த மக்களே வீதிக்கு வரும் நிலையில் இஸ்ரேலிய புல்டோசர்கள் தமது வேட்டையைத் தொடர இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“நாம் இஸ்ரேலிய புல்டோஸர்களுக்கு முன்னாள் முழந்தாளிட்டு நிற்க காரணம் இது எமக்கு மிகவும் பெறுமதியான காணியாகும். இதை நாம் இழந்தால் அதற்கப்பால் இழப்பதற்க எம்மிடம் எதுவுமே இல்லை” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வாயு குண்டுகளையும் சப்த குண்டுகளையும் வீசிய போது நான் எழுந்திருக்க வேணடியதாயிற்று. அப்போது கூட 60 வயதான எனது மைத்துனருக்காகத் தான் நான் அவ்வாறு செய்தேன். அவரின் பெயர் ஒமர். இஸ்ரேலியப் படைகள் அவரை இலக்கு வைத்தனர் அவருக்கு அவசர உதவிகள் அப்போது தேவைப்பட்டன என்று கூறுகின்றார் ஷாதி அல் சமர்.
கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் படைகள் தம்மீது தாக்குதல் நடத்துவது வழமையான ஒன்றாகி விட்டதாக அந்தப் பிரதேச பலஸ்தீன மக்கள் கூறுகின்றனர். இஸ்ரேலிய படைகள் இந்த மக்கள் மீதான நெருக்குதல்களை அதிகரிக்கும் வகையில் ஏனைய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மற்றும் கட்டிட இடிபாடுகளையும் இங்கு கொண்டு வந்து குவித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வாதி அல் றபாபாவில் தனது காணியில் கவலையோடு நிற்கும் முதியவர் ஒமர் ஷம்ரின்.
இதேவேளை இந்தப் பகுதியில் வாழும் மக்கள் தமது காணிகளையும பண்ணை நிலங்களையும் காப்பாற்ற சுழற்சி முறையில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
43 வயதான ஷாதி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தனது பண்ணையில் தனது பிள்ளைகளோடு தான் கழித்த மகிழ்ச்சியான நாற்களை தன்னால் ஒரு போதும் மறக்க முடியாது என்று கூறுகின்றார். 1976இல் இந்த நகரத்தை இஸ்ரேல் கைப்பற்றியப் பின் அதன் இயல்பு நிலையை மாற்ற தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அவற்றையும் மீறி தனது பண்ணையில் உழவு நடவடிக்கை ஒலிவ் மரங்களில் இருந்து அறுவடை மேற்கொண்டமை என்பன தன்னால் மறக்க முடியாதவை என்று அவர் வர்ணிக்கின்றார்.
தனது பண்ணை நிலம் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் ஷாதியின் மைத்துனர் ஷம்ரின் அங்கே அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தார். இஸ்ரேலின் வாயு குண்டில் இருந்து அவரைக் காப்பாற்ற இரண்டு பலஸ்தீன இளைஞர்கள் அவரை அங்கிருந்து இழுத்துச் சென்ற போதும் அவர் முரண்டு பிடித்துக் கொண்டு கண்ணீரும் கம்பளையுமாக அங்கு காணப்பட்டார்.
தினசரி சுமார் ஐந்து மணிநேரத்தை நான் எனது பண்ணையில் கழிப்பேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது ஒரு பூங்காவுக்கு செல்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும் என்று ஒமர் தனது உணர்வை விவரித்தார்.
எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் இந்த மரங்கள் பெருந்தன்மை மிக்கவை. நான் எனது கடின உழைப்பை அவற்றுக்கு வழங்கி உள்ளேன். அவை தம்மால் முடிந்த அளவு பலனை எனக்கு திருப்பித் தந்துள்ளன. அவை எனது நாடி நரம்புகளில் ஓடும் இரத்தம் போன்றவை. அவற்றைக் காப்பாற்ற நான் எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று சூழுரைக்கின்றார் அவர்.
ஆக்கிரமிப்பு என்பது பலஸ்தீன மக்கள் மீது ஆயுதங்களைப் பிரயோகித்து நடத்துவது மட்டும் அல்ல. தன்னிச்சையான சட்டங்கள், இஸ்ரேலின் பாரபட்சமான நீதித்துறை மற்றும் ஏனைய நிறைவேற்றுத் துறை என்பனவும் ஆக்கிரமிப்புககுள் அடங்கும்.
இங்கு இஸ்ரேலிய படையினர் வீடுகளுக்குள் தொடர்ந்து அத்துமீறி பிரவேசித்து வருகின்றனர். தேடுதல்களும் அவ்வாறே இடம்பெறுகின்றன. வீடுகளில் உள்ள நகைகளும் ஏனைய பெறுமதி மிக்க பொருள்களும் திருடப்படுகின்றன. மக்கள் வைத்திருக்கும் பொருள்களுக்கு எதிராக அவர்கள் மீது அநியாயமாகப் பழி சுமத்தப்படுகின்றது. மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேலிய நகர சபை பிரிவும் ஏனைய துறையினரும் பலன் தரும் மரங்கள் பலவற்றை அநியாயமாக அகற்றி வருகின்றனர்.
இந்த பலஸ்தீன வயோதிப பெண்ணின் முகத்தைப் பாருங்கள். இவர் தனது சிறு வயது முதல் இஸ்ரேலிய கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர். மில்லியன் கணக்கான சோகக் கதைகளை அவரது முகத்தில் காண முடிகின்றது. இஸ்ரேலின் காணி சூறையாடல் உற்பட இன்னும் ஆயிரக்கணக்கான கொடூரங்களும் அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தமக்கிழைத்த துரோகத்தின் வடுக்களையும் இந்த வயோதிபப் பெண்ணின் சோகம் ததும்பிய முகத்;தில் காண முடிகின்றது.
Post Disclaimer
Disclaimer: ஜெரூஸலத்தில் தமது பூர்வீகக் காணிகளைக் காப்பாற்ற பலஸ்தீன மக்கள் நடத்தி வரும் முடிவற்ற போராட்டம் லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.